Tuesday, November 30, 2010

நாகப்பண்ணே


உங்கள்
இதழோரம் எப்போதும்
இழையோடும் புன்னகை ...

கோபத்தில் கூட
மென்மை தெரியும் ...

நீங்கள்
பார்த்துபார்த்து பொருட்களை   
பாதுகாப்பதே அழகாயிருக்கும்

எதற்கும் கலங்கிவிடும்
எளிதில் அழுதுவிடும்
பாசமாய்  
மூன்று பிள்ளைகள் ...

பாதுகாவலர்  நீங்கள்
பாசக்காவலர் சீதாமாமி ...

உங்களின் கூட்டுக்குள்
இருந்திருக்கலாமோ என்று
ஏங்கியிருக்கிறேன்
நான்...

நீங்கள்
பாபாவையும்
பற்றினீர்கள்

ஏசுவையும்
ஏற்றீர்கள்

காலன்
ஒரு இரக்கம் கெட்டவன்...

எப்போதும்
பாசமான பலர்மீதே
பாசக்கயிறு வீசுகிறான்

உங்களுக்கு
விரைவில் எட்டியது உயரம்
வாழ்க்கையிலே

எங்களுக்கு
விரைவில் கொட்டியது துயரம்
விழிகளிலே ...

Thursday, November 25, 2010

நாச்சியப்பண்ணே


தாயாய் தந்தையாய்
தகுதிகளில் சிறந்தோன்...

மகனாய் பேரனாய்
மனங்களிலே சிறந்தோன்...

அண்ணனாய் தம்பியாய்
அன்பினிலே  சிறந்தோன்...

கணவனாய் துணைவனாய்
கண்ணியத்தில் சிறந்தோன்...

மாமனாய் மச்சினனாய்
மாசற்றுச் சிறந்தோன்...

சிற்றப்பனாய் பெரியப்பனாய்
சிந்தையிலே சிறந்தோன்...

தோழனாய் சீலனாய்
தொடர்புகளில் சிறந்தோன்...

அய்யனாய் மெய்யனாய்
அகங்களிலே சிறந்தோன்...

ஆசானாய் ஆலோசகனாய்
அறிவுரையில் சிறந்தோன்...

இப்படி
அத்தனை வடிவிலுமே
அற்புதமாய் பொருந்திவிட...

எப்படி முடிந்ததையா
எங்களையும் பிரிந்துவிட...

சிறியோர் எம் தவறுகளை
சீக்கிரமே மன்னித்து...

வாழ்த்துங்கள் எங்களை
வானத்தில் இருந்து...

வணங்குகிறோம் உங்களை
விழியிரெண்டும் நனைந்து!