பொற்பதம் பணிந்தோர்க்கு நற்கதி தருகின்ற அப்பனே எங்கள் கருப்பன்!
அற்பமாம் வாழ்வுதனை சிற்பமாய் செய்திட்டு
அழகாக்கும் எங்கள் கருப்பன்!
அழகாக்கும் எங்கள் கருப்பன்!
இல்லாத குறைதீர்த்து பொல்லாத நோய்போக்கி
காக்கின்ற எங்கள் கருப்பன்!
சொன்னதும் தான்கேட்டு சொல்லாததும் அறிந்து
செய்கின்ற எங்கள் கருப்பன்!
காக்கின்ற எங்கள் கருப்பன்!
சொன்னதும் தான்கேட்டு சொல்லாததும் அறிந்து
செய்கின்ற எங்கள் கருப்பன்!
திண்டாடி வருவோரை பந்தாடி பார்க்காமல்
கொண்டாடும் எங்கள் கருப்பன்!
வான்கொட்டும் மழைபோல தேன்சொட்டும் கனிபோல
வருபவன் எங்கள் கருப்பன்!
உதவிகள் செய்வோர்க்கு பதவிகள் தான்தந்து
உதவிடும் எங்கள் கருப்பன்!
உபத்திரவம் செய்வோர்க்கும் உற்றதுணையாய்நின்று
திருத்திடும் எங்கள் கருப்பன்!
நம்முடைய நிறமென்ன நம்முடைய தரமென்ன
அறிந்தவன் எங்கள் கருப்பன்!
நம்முடைய மனமென்ன நம்முடைய சினமென்ன
புரிந்தவன் எங்கள் கருப்பன்!
காயத்தின் மருந்தையும் களிப்பான விருந்தையும்
அளிப்பவன் எங்கள் கருப்பன்!
நியாயத்தின் படிநின்று அநியாய செயல்களை
அழிப்பவன் எங்கள் கருப்பன்!
கோபத்தில் கடிந்தாலும் வசைமாரி பொழிந்தாலும்
பொறுப்பவன் எங்கள் கருப்பன்!
ரூபத்தில் உருமாறி நம்மோடு என்றுமே
இருப்பவன் எங்கள் கருப்பன்!
யாரென்ன செய்தாலும் யாரென்ன சொன்னாலும்
காவலன் எங்கள் கருப்பன்!
ஊறுகள் வந்தாலும் உதைகளும் தந்தாலும்
வழித்துணை எங்கள் கருப்பன்!
உறவுகளை அனுசரி உண்மையாய் நீசிரி
சொல்பவன் எங்கள் கருப்பன்!
வாழ்விங்கு ஒருமுறை வகையாக வாழ்ந்திட
செய்பவன் எங்கள் கருப்பன்!
துயரங்கள் துய்த்தாலும் பிறர்பிழைகள் செய்தாலும்
துதித்திடு அவனை நிதமே
துன்பங்கள் முடிவாகும் இன்பங்கள் வடிவாகும்
தூய்மையாய் வாழ்வு வருமே!