பகுதி - 1
*************
பேசுவதை விட எழுதிவிடவே விரும்புகிறேன்.
பேச்சின் போது, எண்ணமும், நேரமும் பொருத்திக் கொள்ள வேண்டும், பொருந்தியாக வேண்டும்.அது, கணநேரத்தில் வெளிப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நயத்தோடு குழைத்து நவிலும் வார்த்தைகளாய் இருந்தால் நலம். ஆங்கிலத்தில் Articulation என்பார்கள். அது ஒரு கலை. அது ஒரு பயிற்சி. அது எத்தனை பேருக்கு எளிதாய் வாய்க்கப்பட்டிருக்கிறது?
பலரிடமும் பார்த்து பேசவேண்டியிருக்கும், பயத்தோடு பேசவேண்டியிருக்கும், பணிந்து பேசவேண்டியிருக்கும், அலங்காரம் அணிந்து பேசவேண்டியிருக்கும்
எனவே, வெளிப்பாடுகள் எல்லாம் சிலருக்கு ஒத்தடமாகவும், பலருக்கு தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயிலாகவும் ஆகக் கூடும்.
எழுத்திற்கும் அவை பொருந்தும் என்றாலும், அவற்றை அமைக்கும் நேரங்களும், சமைக்கும் நேரங்களும், அவரவர்கான சாவகாசமும், சந்தர்ப்பமும் பொறுத்தது.
பலரும் பேசுவதை, எழுதுவதை பார்த்து வியக்கிறோம். அந்த உந்ததலில் நாமும் பேச, எழுத விழைகிறோம்.
அப்படி, எப்போது நான் எழுதத் துவங்கினேன்? என்னவெல்லாம் எழுதினேன்? எப்படி அவை கருவானது? எப்படி அவை உருவானது? என்பது காலப்போக்கில் நினைவுகளை விட்டு நீங்கி விடுமோ என்ற எண்ணம் வந்தது. ஏன் அதை அசை போட்டால் என்ன என்ற ஆசை வந்தது.
இதோ... பரண்களின் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாய் பின்னோக்கி பயணிக்கிறேன். தொடராய் எழுதுகிறேன் . என் பாதையின் முட்களை, பூக்களை, வலிகளை, வாழ்த்துக்களை, தோல்விகளை, வெற்றிகளை தொகுக்கிறேன்.
Start now
ReplyDelete