Tuesday, January 10, 2023

விதை - கவிதை - கதை ( பகுதி - 4)

பெயரை அறியும் ஆர்வத்தோடு அடுத்த நாள் என் நண்பனோடு மாடியில் இருந்து இறங்கி கீழே இருந்த வகுப்புகள் நோக்கி சென்றோம் . மதிய உணவு இடைவேளை முடிந்து, அனைவரும் தத்தமது வகுப்புக்கு செல்லும் போதும் எந்த வகுப்பு என்று கண்டு பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் சென்ற போது அவள் பத்தாம் வகுப்பு என்று தெரிந்தது. உடனே நானும் என் நண்பனும் விரைந்து சென்று அவ்வகுப்பு மாணவன் ஒருனை அழைத்து அவளை சுட்டிக்காட்டி பெயர் என்ன என்று கேட்க,  அவள் தன் தோழியுடன் அமர்ந்திருந்ததால், அம்மாணவனுக்கு எந்த பெண்ணை கேட்கிறோம் என்று தெரியாமல், "அது ராஜேஸ்வரியும், சுலோச்சனாவும்" என்று கூறிவிட்டு ஆசிரியர் வந்து விட்டதால் உள்ளே சென்று விட்டான்.

அந்த தேவதைக்கு பெயர் ராஜேஸ்வரியா ?   சுலோச்சனாவா ?  மனதிற்குள் ஒரு பட்டிமன்றம். பெயர் குறிப்பு அறியாத மனத்தவிப்பு.  

பின்னர் அவள் தான் தினமும் பள்ளியின் பிரார்த்தனை பாடலை அவள் பாடத் தொடங்கினாள். அற்புதமான குரல். என் விழிகளுக்கும்,செவிகளுக்கும் தினந்தோறும் வாய்ப்பு. பின்னர் அவள் பெயரை எளிதாய் தெரிந்து கொண்டேன்... ஆம் அவள் "சுலோச்சனா".   ஓரிரு முறை பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. பெரிதாய் ஏதுமில்லை.

கல்வி , கடமை என்று ஒருபுறம்.  மறுபுறம்  என் வகுப்பின் அடுத்த செக்க்ஷனில் உள்ள நண்பர்களை அடிக்கடி சந்திக்க செல்வதுண்டு.   அப்போது தான் தெரிந்தது, அந்த வகுப்பில் உள்ள ஒரு பெண் என் மேல் காதல் என்று...அந்த தகவல் அந்த வகுப்பில் இருந்து, எங்கள் வகுப்பிற்கு பரவியது. அவள் பெயர் ப்ரியா.

அவள் என்னை பார்க்க வேண்டுமென்றே அடிக்கடி என் வகுப்பிற்கு தன் தோழிகளோடு வருவாள். அவள் வரும் போதெல்லாம்  என் நணபர்கள் வேண்டுமென்றே எழுந்து நிற்பார்கள்.  அவளும் நன்கு படிப்பாள் என்பதால் ஏதேனும் சந்தேகம் கேட்பது போல் என்னுடன் பேசுவதுண்டு. என் நோட்ஸ் சில சமயம் கேட்பதுண்டு.

அப்படிச் சென்றபோது,  பன்னிரண்டாம் வகுப்பின் கடைசி நாள் வந்துவிட்டது. அந்த நாளில் ப்ரியா மற்றும் தோழிகளின் ஆட்டோகிராப் புத்தகங்கள் குவிந்தது.  என் நண்பர்கள் ஆனந்த் எழுதிய பிறகு தான் நாங்கள் எழுதுவோம் என்று என்னை ஓட்டினார்கள்.  பலரும் ஆங்கில பழமொழிகள், வழக்கமான வாக்கியங்கள் என்று எழுதியபோது, வித்தியாசமாக ஏதேனும் எழுதினால் என்ன எண்ணியபோது, சட்டென்று சில வரிகள் மனதில் மின்னின.  என்ன அது, எப்படி வந்தது என்று தெரியவில்லை.  ஆனாலும் அந்த நான்கு வரிகளையே நான் ஆட்டோகிராப் புத்தகங்களில் எழுதினேன்.   வருடம் முடிந்தது.  திசைகள் மாறியது.

ஆனால், மின்னிய அந்த வரிகளின் எண்ணம் அடுத்த என் நகர்வுக்கு என்னை ஆயத்தமாக வைத்தது.  நான் என்னுள் தேட ஆரம்பித்தேன்.  நாலடியாராக தோன்றியதை எல்லாம் எழுத தொடங்கினேன். ஒரு டைரி முழுக்க என்னுடைய குட்டி குட்டி கவிதைகள் குவிந்தது.  ஒருநாள் அது அப்பா கண்ணில் பட, அதை முழுவதுமாய் படித்துவிட்டு எனக்கு நிகழ்ந்தது ஒரு மணிநேரம் அறிவுரை. தொடராத, பெரிதாய் என்னை செலுத்தாத என்  ஒருதலை காதலை, அதனால் விளைந்த ஆரம்ப கால கிறுக்கல்களாய் எழுதியவற்றிற்கு அப்பாவின் அறிவுரை என் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றி எனலாம். 

அதன்பின், நாலடிகளுக்கு பதில் எனக்கு பிடித்த சில திரைப்பாடல்கள் சிலவற்றின் சந்தத்திற்கு என் வரிகளை எழுதத் தொடங்கினேன். அது சிறிது காலம் தொடர்ந்தது.  எத்தனை நாளுக்கு அடுத்தவர் பாட்டுக்கு வரிகள் எழுதுவது என்று தோன்ற,  புதிதாய் நாமே எழுதினால் என்ன என்று தோன்றியது.   இளையராஜாவின்  பாடல்களை கேட்டுக்கேட்டு மனதிற்குள் ஏராளமாய் படிந்த எண்ணங்கள் எனக்கு பெரும் உதவியாய் இருந்தது.  இதற்கிடையில் ட்யூஷன் ஆசிரியர் அந்த ஆண்டின் கடைசி நாள் கொண்டாட்டத்தை சேலத்தில் உள்ள National Hotelல்  ஏற்பாடு செய்திருந்தார்.  நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்தேன்.   என்ன பாடுவது?  முதல் மேடை அனுபவம்...பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.   கண்டனூர் காலத்து பஜனைகள் தந்திருந்த உத்வேகம் உள்ளிருக்க, நினைச்சின்னம் என்ற படத்திலிருந்து "சிங்கார சீமையிலே" என்ற தாலாட்டு பாடல் ஒன்றை பாட முடிவெடுத்தேன். இளையராஜாவின் குரலை அப்படியே Imitate செய்து பாடினேன்.  நல்ல பாராட்டு.  முதல் பரிசும் கிடைத்தது. 

குடும்பச் சூழல், கல்வியில் கவனம், புதிய சூழல் என்றிருந்த அந்த காலகட்டத்தில் காதலுக்கு நேரமில்லை. மேலும் அனைத்தையும் ஒன்று சேர யோசிக்கும் திறன் அன்று இருந்ததால் காதல் கடலுக்குள் கால் நனைத்ததோடு சரி...

ஆனால், அந்த சிறிய பாதிப்புகள் என்னை விடவில்லை ...எழுத விரட்டியது ....எப்படி ?

Saturday, January 7, 2023

விதை - கவிதை - கதை ( பகுதி - 3)

சேலம்...

பதினைந்து ஆண்டுகள் பழகிய கிராமத்து வாசம் தாண்டி, சற்றே வேறுபட்டதாய் இருந்தது.

பதினொன்றாவது வகுப்பு. புதுப்புது நண்பர்கள்.  கண்டனூரில் ஓட்ட முடியாத மிதிவண்டியை தொடர்ந்து ஓட்டி உயரமாகி இருந்தேன். பள்ளி முடிந்ததும் டியூஷன் நண்பர் குழுவுடன் செல்வது வழக்கமாயிருந்தது. அவ்வப்போது அப்பா, அம்மா ஊருக்கு செல்லும் போது உணவுக்காக கொடுத்த காசு  செலவழிக்காமல் புதிதாய் அறிமுகமான ரோஜா மியூசிக்கல்ஸ் நண்பர் கடையில் கேசட்டுகளாய் சேர்ந்தது.  பெரும்பாலும் பட்டினி... இளையராஜா முகம் கொண்ட எக்கோ மற்றும் ராஜா ஒலிநாடாக்களை பாடல்கள் கேட்காமலே கண்ணை மூடிக்கொண்டு வாங்குவது வழக்கம்.  தொடர்ந்து அதை வாங்கி, இணைந்து பாடிப் பாடி பாட்டு வளர்ந்தது. அந்த வகையில் என் பாட்டு வாத்தியார் இளையராஜாவும் அவரது பாடல்களுமே. மேலும் நான்காவது வகுப்பில் இருந்து ஆண்டின் இறுதி நாளில் ஆசிரியைகள் என்னை பாடச்சொல்வார்கள். அப்படி நான்காம் வகுப்பு இறுதி நாளில் பாடியது... "ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ" என்ற பயணங்கள் முடிவதில்லை படப்பாடல். நன்றாகப் பாடினேன் என்று ஆசிரியை தான் சென்ற அடுத்த வகுப்புக்கும் அழைத்து சென்று பாடச் சொன்னார்கள். எட்டாவது வகுப்பு இறுதி நாளில் "ஓ... நெஞ்சே நீதான் பாடும் ராகங்கள் ".  மேலும் நான்காவது முதல் எட்டாவது வகுப்பு வரை தமிழில் முதல் மதிப்பெண் பெறுவதற்காய், பெற்றதற்காய் என் தமிழ் ஆசிரியை கலைச்செல்வி மற்றும் ஆசிரியர் ஜானகி ராமன் பரிசுகள் தருவதுண்டு. அப்படி பரிசுகளும் வந்தது, தமிழ் ஆர்வமும் அதிகரித்தது.

பதினொன்றாவது  வகுப்பில் 24 பெண்கள், 15 ஆண்கள். அளவில்லா அரட்டைகள், நல்ல மதிப்பெண்கள் என்று இருந்ததால் அனைவருக்கும் நான் நல்ல பரிச்சயம்.மதிய உணவு இடைவேளைகளில் மேல் மாடியின் படிகளில் அமர்ந்து நண்பர்கள் அரட்டை அடிப்பதுண்டு. அப்போது நிகழ்ந்தது அந்த வேதியல் மாற்றம். மாடியின் மேலிருந்து பார்க்கும் பொழுது ஒரு தேவதை தன் வகுப்புத் தோழிகளோடு வந்து கொண்டிருந்தாள். அனைவரும் பார்த்து கொண்டிருந்த போது,  அந்த ஒரு தேவதையின் தோற்றம், அவளின் ஒற்றைகல்  மூக்குத்தி வெயில் பட்டு ஒளிர்ந்திழுக்க, அவள் தோழிகளோடு புன்னகைத்து பேசி வரும் அழகில் மனம் லயித்தது, இனம் புரியா உணர்வுகளில் திளைத்தது...
தினமும் உணவு இடைவேளைகளில் கூடினோம்.

காட்சிகள் தொடர, கவனங்கள் படர... ஏராளம் கேள்விகள் எழுந்தது என்னுள்.

யாரவள்?  எந்த வகுப்பு?  அவள் பெயர் என்ன? 

Sunday, January 1, 2023

விதை - கவிதை - கதை [ பகுதி - 2 ]

 கண்டனூர்....

என் பால்ய காலத்தின் பால பாடங்கள் தொடங்கிய சிற்றூர். குடும்பம், சில உறவுகள் என்ற குறுகிய வட்டமே உலகமாய் இருந்தது. கல்வியிலேயே முழு கவனம் இருந்தது, நல்ல தேர்ச்சியும் இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு மாமன் மகன் நாகப்பனுடன் செல்வது,  வாரத்திற்கு காய்கறி வாங்க வேண்டி தந்த பத்து ரூபாயில், பார்த்து பார்த்து வாங்கி, பதுக்கிய மீதத்தில் கண்டனூர் தீன் திரையரங்கத்திற்கோ, புதுவயல் சங்கர் திரையரங்கிற்கோ சினிமா பார்க்கச் செல்வதே வாடிக்கையாய் தொடர்ந்தது.

இலங்கை வானொலியின் குரல்களும், இசையும் வசீகரித்தது. காத்திருந்து, காத்திருந்து செவிகளுக்குள் சேர்ந்த பாடல்களால் வானொலி பெரிய வசீகரமாய், வரமாய் தெரிந்தது. இனம் புரியாத மாயத்தை இசை செய்தது. எழுதும் எண்ணமோ, ஆர்வமோ எதுவும் அப்போது இல்லை?  

வருடந்தோறும் வரும் திருவிழாக்கள், வைகைகரை பூசை, என உறவுகள் சூழச் செல்வது  பெரும் மகிழ்ச்சி தரும். சபரிமலை மற்றும் முருகன் கோவில் செல்லும் பக்தர்களின் பஜனைகள் நடக்கும். அதில் பாடும் KTR அய்யா, வள்ளல் சீனி அய்யா, கட்டியம் சொல்லும் ராஜா கருப்பையா ஆகியோர் நட்சத்திர பாடகர்களாய் தோன்றும்.  பின்னர் முருகன் பாடல் பாடும் பாடகராய் நண்பன் சின்னய்யா, மற்றும் பாடுவதெற்கெனவே அழைத்து செல்லப்படும் சகோதர, சகோதரியும் என்னுள் ஏதோ ஒரு சிறிய தாக்கம் செய்திருக்கும் என்றே நினைக்கிறேன்.  ஆனால், நானும் எழுதவேண்டும், பாட வேண்டும் என்று எண்ணவில்லை. என் எண்ணமெல்லாம் முருகனை, ஐயப்பனை தாண்டி பூஜையின் முடிவில் தரப்படும் பிரசாதம், சுண்டலில் மட்டுமே இருந்தது. இரவு நேர பஜனையில் இடையிடையே பாடும் சில வித்தியாச பாடகர்களை கேட்டு சிரிப்பதும், சில்மிஷங்கள் செய்வதும், தூங்கி வழிந்து சுண்டல் தரப்படும் வேளையில் சுறுசுறுப்பாய் கண்விழித்து, தொண்ணையை பெற்று  வெற்றியோடு வீடு திரும்புவதும் வழக்கமாய் இருந்தது.

தினசரி பள்ளி முடிந்ததும் அடுத்த வீதியில் இருக்கும் ஆத்தா வீடு( ஆயாவை ஆத்தா என்றே அழைப்போம்)  சென்றுவிடுவதுண்டு.  யாருக்கும் தெரியாமல் எனக்கெனவே அவர்கள் தரும் சீனி ரொட்டியும்,  முறுகல் தோசையும் இன்னும் மனதில் சுவையாய் இருக்கிறது. 

கண்டனூர் தாண்டி காரைக்குடியே அதிகபட்சமான நகர்வாய் எண்ணியதுண்டு.  வெளியூரில் இருந்து யாரேனும் உறவுகள் வந்தால் அவர்கள் பற்றிய சிறு பிரமிப்பு இருந்ததுண்டு.    கண்டனூரின் பெரிய வீடு,  வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி உடைத்த பொருட்கள், வாங்கிய திட்டுக்கள் அதிகம்.

ஐந்து, ஆறு வயதில் நான்  நடிகர் சிவகுமாரின் ரசிகன். என் மனம் கவர்ந்த முதல் நாயகன் அவரை போல் தலைவாரிகொள்வது வழக்கம். பின்னர் 1979 ம் ஆண்டு ஆடு புலி ஆட்டம் என்று ஒரு படம். அதில் கலைந்த கேசமும் , சராசரியை விடுத்த வித்தியாசமுமாய் ஒரு நாயகன். ஏனோ பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒட்டிக்கொண்டது அந்த நடிகரின் வேகமும், வசன உச்சரிப்பும், அழகாக சிகரெட்டை வாயில் எறியும் ஸ்டைலும் பெரிதும் கவர்ந்தது  .  அவர் தான் ரஜினிகாந்த்.  அப்போது சினிமா எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை ஒன்று வீட்டிற்கு வரும்.  அதில் நடிக, நடிகையரின்  முகவரிகளும் வரும். அதில் வந்த ரஜினிகாந்தின் முகவரி எடுத்து நீண்ட கடிதம் ஒன்று எழுதினேன், குறிப்பாக சிகரெட் பிடிக்காதீர்கள் என்ற வேண்டுகோளோடு.  சில வாரங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தோடு பதில் வந்தது. ரஜினிகாந்தே தன்  கைப்பட எழுதியதாய் மகிழ்ந்து அதை பல்லாண்டுகளாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.  

கால் சட்டை வயதின் சில கன்றுக்குட்டி காதல்களையும் கவனித்ததுண்டு.  அதனை விவரித்தால் சில சர்ச்சைகள் எழும் என்று தவிர்க்கிறேன்.  1981ம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு படம். பாடல்கள் வானொலியில் வந்து மனதை ஏதோ செய்தது. அந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.  அனால் அது "A " படம் என்று அனுமதி கிடைக்கவில்லை, அந்த வயதில் ஏன் என்றும் புரியவில்லை.   இளையராஜா இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அற்புதமான காலகட்டம்.  மோகன், T .ராஜேந்தர் என தனித்துவங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த காலம். 1984ம்  ஆண்டில் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டிருந்த சமயம்  வீட்டில் இருந்த ஒலிநாடாவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது முதல் மரியாதை மற்றும் இதய கோவில் படப்பாடல்கள். நண்பர்கள் புடைசூழ அந்த விடுமுறை முழுவதும் அனைவரும் சீட்டு விளையாடியது மகிழ்ச்சியாய் இருந்தது அறுபது நிமிடம், தொண்ணூறு நிமிடம் என  ஒலிநாடாக்கள் வாங்குவது என்பது இலகுவாய் அல்லாத பெரும் வரம்.  ஒலிநாடாக்களில் என்னென்ன பாடல்களை பதிவேற்றுவது என்பதே அலாதியான சுகம். ஞாயிறு மதியம் 1 மணிக்கு நீங்கள் கேட்டவை என்று ஒரு நிகழ்ச்சி வானொலியில் வரும். அதில் வரும் பாடல்களை பதிவு செய்ய நாகப்பன் வீட்டுக்கு சென்று பதிவு செய்வது வழக்கம்.  கவனமுடன் பிடித்த பாடல்களை பதிவு செய்யும் போது ஏனோ Sound  Engineer போன்ற சந்தோஷம் கொள்வதுண்டு. அதற்கான ஒலிநாடாக்கள் அப்பா வாங்கித் தந்தால் , யாரேனும் இலவசமாய் கொடுத்தால் ஏதோ புதையல் கிடைத்தது போன்று மனம் புளகாங்கிதம் அடைவதுண்டு.

கண்டனூரை அடுத்து காரைக்குடியே இலக்காய் இருந்த வாழ்வில் , 1987ம் ஆண்டு சேலத்திற்கு மாறிப்போகிறோம் என்று முடிவானது.

வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம் ஆனது...