பெயரை அறியும் ஆர்வத்தோடு அடுத்த நாள் என் நண்பனோடு மாடியில் இருந்து இறங்கி கீழே இருந்த வகுப்புகள் நோக்கி சென்றோம் . மதிய உணவு இடைவேளை முடிந்து, அனைவரும் தத்தமது வகுப்புக்கு செல்லும் போதும் எந்த வகுப்பு என்று கண்டு பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் சென்ற போது அவள் பத்தாம் வகுப்பு என்று தெரிந்தது. உடனே நானும் என் நண்பனும் விரைந்து சென்று அவ்வகுப்பு மாணவன் ஒருனை அழைத்து அவளை சுட்டிக்காட்டி பெயர் என்ன என்று கேட்க, அவள் தன் தோழியுடன் அமர்ந்திருந்ததால், அம்மாணவனுக்கு எந்த பெண்ணை கேட்கிறோம் என்று தெரியாமல், "அது ராஜேஸ்வரியும், சுலோச்சனாவும்" என்று கூறிவிட்டு ஆசிரியர் வந்து விட்டதால் உள்ளே சென்று விட்டான்.
அந்த தேவதைக்கு பெயர் ராஜேஸ்வரியா ? சுலோச்சனாவா ? மனதிற்குள் ஒரு பட்டிமன்றம். பெயர் குறிப்பு அறியாத மனத்தவிப்பு.
பின்னர் அவள் தான் தினமும் பள்ளியின் பிரார்த்தனை பாடலை அவள் பாடத் தொடங்கினாள். அற்புதமான குரல். என் விழிகளுக்கும்,செவிகளுக்கும் தினந்தோறும் வாய்ப்பு. பின்னர் அவள் பெயரை எளிதாய் தெரிந்து கொண்டேன்... ஆம் அவள் "சுலோச்சனா". ஓரிரு முறை பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. பெரிதாய் ஏதுமில்லை.
கல்வி , கடமை என்று ஒருபுறம். மறுபுறம் என் வகுப்பின் அடுத்த செக்க்ஷனில் உள்ள நண்பர்களை அடிக்கடி சந்திக்க செல்வதுண்டு. அப்போது தான் தெரிந்தது, அந்த வகுப்பில் உள்ள ஒரு பெண் என் மேல் காதல் என்று...அந்த தகவல் அந்த வகுப்பில் இருந்து, எங்கள் வகுப்பிற்கு பரவியது. அவள் பெயர் ப்ரியா.
அவள் என்னை பார்க்க வேண்டுமென்றே அடிக்கடி என் வகுப்பிற்கு தன் தோழிகளோடு வருவாள். அவள் வரும் போதெல்லாம் என் நணபர்கள் வேண்டுமென்றே எழுந்து நிற்பார்கள். அவளும் நன்கு படிப்பாள் என்பதால் ஏதேனும் சந்தேகம் கேட்பது போல் என்னுடன் பேசுவதுண்டு. என் நோட்ஸ் சில சமயம் கேட்பதுண்டு.
அப்படிச் சென்றபோது, பன்னிரண்டாம் வகுப்பின் கடைசி நாள் வந்துவிட்டது. அந்த நாளில் ப்ரியா மற்றும் தோழிகளின் ஆட்டோகிராப் புத்தகங்கள் குவிந்தது. என் நண்பர்கள் ஆனந்த் எழுதிய பிறகு தான் நாங்கள் எழுதுவோம் என்று என்னை ஓட்டினார்கள். பலரும் ஆங்கில பழமொழிகள், வழக்கமான வாக்கியங்கள் என்று எழுதியபோது, வித்தியாசமாக ஏதேனும் எழுதினால் என்ன எண்ணியபோது, சட்டென்று சில வரிகள் மனதில் மின்னின. என்ன அது, எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த நான்கு வரிகளையே நான் ஆட்டோகிராப் புத்தகங்களில் எழுதினேன். வருடம் முடிந்தது. திசைகள் மாறியது.
ஆனால், மின்னிய அந்த வரிகளின் எண்ணம் அடுத்த என் நகர்வுக்கு என்னை ஆயத்தமாக வைத்தது. நான் என்னுள் தேட ஆரம்பித்தேன். நாலடியாராக தோன்றியதை எல்லாம் எழுத தொடங்கினேன். ஒரு டைரி முழுக்க என்னுடைய குட்டி குட்டி கவிதைகள் குவிந்தது. ஒருநாள் அது அப்பா கண்ணில் பட, அதை முழுவதுமாய் படித்துவிட்டு எனக்கு நிகழ்ந்தது ஒரு மணிநேரம் அறிவுரை. தொடராத, பெரிதாய் என்னை செலுத்தாத என் ஒருதலை காதலை, அதனால் விளைந்த ஆரம்ப கால கிறுக்கல்களாய் எழுதியவற்றிற்கு அப்பாவின் அறிவுரை என் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றி எனலாம்.
அதன்பின், நாலடிகளுக்கு பதில் எனக்கு பிடித்த சில திரைப்பாடல்கள் சிலவற்றின் சந்தத்திற்கு என் வரிகளை எழுதத் தொடங்கினேன். அது சிறிது காலம் தொடர்ந்தது. எத்தனை நாளுக்கு அடுத்தவர் பாட்டுக்கு வரிகள் எழுதுவது என்று தோன்ற, புதிதாய் நாமே எழுதினால் என்ன என்று தோன்றியது. இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கேட்டு மனதிற்குள் ஏராளமாய் படிந்த எண்ணங்கள் எனக்கு பெரும் உதவியாய் இருந்தது. இதற்கிடையில் ட்யூஷன் ஆசிரியர் அந்த ஆண்டின் கடைசி நாள் கொண்டாட்டத்தை சேலத்தில் உள்ள National Hotelல் ஏற்பாடு செய்திருந்தார். நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்தேன். என்ன பாடுவது? முதல் மேடை அனுபவம்...பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. கண்டனூர் காலத்து பஜனைகள் தந்திருந்த உத்வேகம் உள்ளிருக்க, நினைச்சின்னம் என்ற படத்திலிருந்து "சிங்கார சீமையிலே" என்ற தாலாட்டு பாடல் ஒன்றை பாட முடிவெடுத்தேன். இளையராஜாவின் குரலை அப்படியே Imitate செய்து பாடினேன். நல்ல பாராட்டு. முதல் பரிசும் கிடைத்தது.
குடும்பச் சூழல், கல்வியில் கவனம், புதிய சூழல் என்றிருந்த அந்த காலகட்டத்தில் காதலுக்கு நேரமில்லை. மேலும் அனைத்தையும் ஒன்று சேர யோசிக்கும் திறன் அன்று இருந்ததால் காதல் கடலுக்குள் கால் நனைத்ததோடு சரி...
ஆனால், அந்த சிறிய பாதிப்புகள் என்னை விடவில்லை ...எழுத விரட்டியது ....எப்படி ?
No comments:
Post a Comment