Sunday, January 1, 2023

விதை - கவிதை - கதை [ பகுதி - 2 ]

 கண்டனூர்....

என் பால்ய காலத்தின் பால பாடங்கள் தொடங்கிய சிற்றூர். குடும்பம், சில உறவுகள் என்ற குறுகிய வட்டமே உலகமாய் இருந்தது. கல்வியிலேயே முழு கவனம் இருந்தது, நல்ல தேர்ச்சியும் இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு மாமன் மகன் நாகப்பனுடன் செல்வது,  வாரத்திற்கு காய்கறி வாங்க வேண்டி தந்த பத்து ரூபாயில், பார்த்து பார்த்து வாங்கி, பதுக்கிய மீதத்தில் கண்டனூர் தீன் திரையரங்கத்திற்கோ, புதுவயல் சங்கர் திரையரங்கிற்கோ சினிமா பார்க்கச் செல்வதே வாடிக்கையாய் தொடர்ந்தது.

இலங்கை வானொலியின் குரல்களும், இசையும் வசீகரித்தது. காத்திருந்து, காத்திருந்து செவிகளுக்குள் சேர்ந்த பாடல்களால் வானொலி பெரிய வசீகரமாய், வரமாய் தெரிந்தது. இனம் புரியாத மாயத்தை இசை செய்தது. எழுதும் எண்ணமோ, ஆர்வமோ எதுவும் அப்போது இல்லை?  

வருடந்தோறும் வரும் திருவிழாக்கள், வைகைகரை பூசை, என உறவுகள் சூழச் செல்வது  பெரும் மகிழ்ச்சி தரும். சபரிமலை மற்றும் முருகன் கோவில் செல்லும் பக்தர்களின் பஜனைகள் நடக்கும். அதில் பாடும் KTR அய்யா, வள்ளல் சீனி அய்யா, கட்டியம் சொல்லும் ராஜா கருப்பையா ஆகியோர் நட்சத்திர பாடகர்களாய் தோன்றும்.  பின்னர் முருகன் பாடல் பாடும் பாடகராய் நண்பன் சின்னய்யா, மற்றும் பாடுவதெற்கெனவே அழைத்து செல்லப்படும் சகோதர, சகோதரியும் என்னுள் ஏதோ ஒரு சிறிய தாக்கம் செய்திருக்கும் என்றே நினைக்கிறேன்.  ஆனால், நானும் எழுதவேண்டும், பாட வேண்டும் என்று எண்ணவில்லை. என் எண்ணமெல்லாம் முருகனை, ஐயப்பனை தாண்டி பூஜையின் முடிவில் தரப்படும் பிரசாதம், சுண்டலில் மட்டுமே இருந்தது. இரவு நேர பஜனையில் இடையிடையே பாடும் சில வித்தியாச பாடகர்களை கேட்டு சிரிப்பதும், சில்மிஷங்கள் செய்வதும், தூங்கி வழிந்து சுண்டல் தரப்படும் வேளையில் சுறுசுறுப்பாய் கண்விழித்து, தொண்ணையை பெற்று  வெற்றியோடு வீடு திரும்புவதும் வழக்கமாய் இருந்தது.

தினசரி பள்ளி முடிந்ததும் அடுத்த வீதியில் இருக்கும் ஆத்தா வீடு( ஆயாவை ஆத்தா என்றே அழைப்போம்)  சென்றுவிடுவதுண்டு.  யாருக்கும் தெரியாமல் எனக்கெனவே அவர்கள் தரும் சீனி ரொட்டியும்,  முறுகல் தோசையும் இன்னும் மனதில் சுவையாய் இருக்கிறது. 

கண்டனூர் தாண்டி காரைக்குடியே அதிகபட்சமான நகர்வாய் எண்ணியதுண்டு.  வெளியூரில் இருந்து யாரேனும் உறவுகள் வந்தால் அவர்கள் பற்றிய சிறு பிரமிப்பு இருந்ததுண்டு.    கண்டனூரின் பெரிய வீடு,  வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி உடைத்த பொருட்கள், வாங்கிய திட்டுக்கள் அதிகம்.

ஐந்து, ஆறு வயதில் நான்  நடிகர் சிவகுமாரின் ரசிகன். என் மனம் கவர்ந்த முதல் நாயகன் அவரை போல் தலைவாரிகொள்வது வழக்கம். பின்னர் 1979 ம் ஆண்டு ஆடு புலி ஆட்டம் என்று ஒரு படம். அதில் கலைந்த கேசமும் , சராசரியை விடுத்த வித்தியாசமுமாய் ஒரு நாயகன். ஏனோ பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒட்டிக்கொண்டது அந்த நடிகரின் வேகமும், வசன உச்சரிப்பும், அழகாக சிகரெட்டை வாயில் எறியும் ஸ்டைலும் பெரிதும் கவர்ந்தது  .  அவர் தான் ரஜினிகாந்த்.  அப்போது சினிமா எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை ஒன்று வீட்டிற்கு வரும்.  அதில் நடிக, நடிகையரின்  முகவரிகளும் வரும். அதில் வந்த ரஜினிகாந்தின் முகவரி எடுத்து நீண்ட கடிதம் ஒன்று எழுதினேன், குறிப்பாக சிகரெட் பிடிக்காதீர்கள் என்ற வேண்டுகோளோடு.  சில வாரங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தோடு பதில் வந்தது. ரஜினிகாந்தே தன்  கைப்பட எழுதியதாய் மகிழ்ந்து அதை பல்லாண்டுகளாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.  

கால் சட்டை வயதின் சில கன்றுக்குட்டி காதல்களையும் கவனித்ததுண்டு.  அதனை விவரித்தால் சில சர்ச்சைகள் எழும் என்று தவிர்க்கிறேன்.  1981ம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு படம். பாடல்கள் வானொலியில் வந்து மனதை ஏதோ செய்தது. அந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.  அனால் அது "A " படம் என்று அனுமதி கிடைக்கவில்லை, அந்த வயதில் ஏன் என்றும் புரியவில்லை.   இளையராஜா இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அற்புதமான காலகட்டம்.  மோகன், T .ராஜேந்தர் என தனித்துவங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த காலம். 1984ம்  ஆண்டில் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டிருந்த சமயம்  வீட்டில் இருந்த ஒலிநாடாவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது முதல் மரியாதை மற்றும் இதய கோவில் படப்பாடல்கள். நண்பர்கள் புடைசூழ அந்த விடுமுறை முழுவதும் அனைவரும் சீட்டு விளையாடியது மகிழ்ச்சியாய் இருந்தது அறுபது நிமிடம், தொண்ணூறு நிமிடம் என  ஒலிநாடாக்கள் வாங்குவது என்பது இலகுவாய் அல்லாத பெரும் வரம்.  ஒலிநாடாக்களில் என்னென்ன பாடல்களை பதிவேற்றுவது என்பதே அலாதியான சுகம். ஞாயிறு மதியம் 1 மணிக்கு நீங்கள் கேட்டவை என்று ஒரு நிகழ்ச்சி வானொலியில் வரும். அதில் வரும் பாடல்களை பதிவு செய்ய நாகப்பன் வீட்டுக்கு சென்று பதிவு செய்வது வழக்கம்.  கவனமுடன் பிடித்த பாடல்களை பதிவு செய்யும் போது ஏனோ Sound  Engineer போன்ற சந்தோஷம் கொள்வதுண்டு. அதற்கான ஒலிநாடாக்கள் அப்பா வாங்கித் தந்தால் , யாரேனும் இலவசமாய் கொடுத்தால் ஏதோ புதையல் கிடைத்தது போன்று மனம் புளகாங்கிதம் அடைவதுண்டு.

கண்டனூரை அடுத்து காரைக்குடியே இலக்காய் இருந்த வாழ்வில் , 1987ம் ஆண்டு சேலத்திற்கு மாறிப்போகிறோம் என்று முடிவானது.

வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம் ஆனது...

No comments:

Post a Comment